செவ்வாய், 24 மார்ச், 2009

உலகத் தீரே! உலகத் தீரே!

 

உலகத்தீரே! உலகத்தீரே! 

            (நேரிசை அகவல்)


உலகத் தீரே! உலகத் தீரே!
விலகாக் கொடுமை வெங்கோற் கொற்ற
ஒடுக்கு முறைக்கு மடக்கு முறைக்கும்
நெடுக்க நைந்தவர் நிமிர்ந்தேழ்ந் ததனால்
கொத்துக் குண்டுகள்! கொடுந்தீ எரிப்புகள்!
நித்த மோலங்கள்! நீக்கமில் லழிப்புகள்!
குழவியர் சூலியர் கிழவரோ டூனர்
அழிவுற உறுப்பற அறங்கொற் றாக்குதல்!
நெறிமறுப் பழிப்புகள்! எறிகணைப் பொழிவுகள்!
வெறிமிகுங் குதறலில் வீழ்பலி தாய்க்குலம்!

நீண்டபல் லாண்டாய் நெடும்பழிச் சிங்களர் 
கோண்மதிக் கொடுமையிற் குமைந்தழி உறவுகள்
காத்திடற் கார்த்தோம்! கடுங்குர லெழுப்பினோம்!
கோத்துகை நின்றோம்! மூத்தோ ரிளையோர்
பேரணி சென்றோம்! பெருவழி மறித்தோம்!
போரை நிறுத்தவும் புன்செய லறுக்கவும்
ஊர்தொறுங் கூடி உண்ணா திருந்தோம்!
தீர்த்திடு துயரெனத் தில்லியைக் கேட்டோம்!
பன்னிரு ஈகியர் பதைப்புற் றாற்றா
தின்னுயி ரெரிதழற் கீந்தும் வேண்டினோம்!

இந்திய அரசே! எடுநட வடிக்கை!
எந்தமிழ்ச் சொந்தம் ஈழத் தமிழரைக்
காத்திடென் றிறைஞ்சினோம்! கதறினோம்! கெஞ்சினோம்!
பூத்திடா அத்தியாய்ப் பொத்திய வாய
ரேதுங் கூறா திருந்தது மேனென
சூதரின் இரண்டகச் சூழ்ச்சிபின் சொலிற்று!
வெய்ய சிங்களர் வென்றிடற் கென்றே
பையவே அவர்க்குப் பல்வே றுதவிகள்
ஆய்தந் தொகையென அள்ளிக் கொடுத்தனர்!
போய்த்துணை செய்யப் போர்ப்படை வீரரைப்

புனைவி லனுப்பினர்! புலிகளின் வான்படை
தனைக்கண் டழித்திடத் தந்தனர் கதுவீ !
அரிய வுளவெலாந் தெரிந்தே சிங்களர்
புரிய வுரைத்தனர்! கரியவன் னெஞ்சொடு
பேரழி வின்பின் பிழைத்திருப் போர்க்கே
போரை முடித்தபின் போயங் குதவுவ
மென்றே வுரைத்து எல்லா வுதவியும்
குன்ற லின்றியக் கொடியவர்க் களிப்பர்!
இங்கிங் ஙனமே இழிநிலை யிருக்க
பொங்கிய உணர்வின் புலம்பெயர் தமிழர்

அங்கங் கவர்கள் தங்கிய நாட்டினில்
மங்கா ஊக்கொடு மக்களைத் திரட்டிக்
கவனம் ஈர்த்திடக் கடும்பனி மழையினில்
துவளா தார்ப்பொடு தூத ரகங்களில்
முற்றுகை செய்தனர்; முறையீ டிட்டனர்!
சற்றுந் தயக்கிலா முற்றிய உணர்வினர்
மூவ ரவர்களின் முழுவுடற் றீயில்
வேவுறக் குளித்தனர்! வெந்து மாண்டனர்!
தெள்ளத் தெரிந்தும் தீங்கினை யறிந்தும்
உள்ளம் உருகிடா உலகத் தீரே!

கிழக்குத் தைமூர் வழக்குதீர்த் திட்டீர்!
குழப்பறத் தெளிவுற கொசாவா விடுதலை
ஒப்பினீர்! காசா உறுதாக் குதல்கள்
தப்பெனக் கடிவீர்! தயங்கா தாப்கான்
அமைதிக் கெனவே ஆவன செய்வீர்!
குமைவிலா நோக்கிலக் கொள்கை போற்றுவம்!
ஆனா லீழத் தழிக்கப் படுமெம்
மானவர் கொடுந்துயர் மாற்றிடத் தயக்கேன்?
வல்லர செல்லாம் பொல்லார்க் குதவவோ?
அல்லவைக் காக்கம் அறமோ? எண்ணுவீர்!

கொஞ்சமும் கருதிடாக் கொடுமை தொடர்வதா?
நெஞ்சுதொட் டுரைப்பீர், நேர்மையோ? மாந்த
நேயமு மற்றதோ? நீளின அழிப்பு
ஞாயமோ? உலகீர், நல்லறங் கருதுக!
அடிமை நிலையெதிர்ப் பதுபெருங் கேடா?
கடிதீர் வெனவினம் முடிய அழிப்பதா?
மாந்தத் தகவொடும் மன்பதை அருளொடும்
பாந்தநல் லுணர்வில் ஏந்து நயன்மையில்
புலம்பிருள் நீக்க, புலர
உலகீ ரெழுவீர், உடனடி வினைக்கே!

-----------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக