வெள்ளி, 26 செப்டம்பர், 2008

புரட்சித்துறவி இராமலிங்க அடிகளார்

என்னதான் சொன்னார்?  எதைத்தான் கேட்டோம்?

[அறுசீர் ஆசிரிய மண்டிலம் (நான்குகாய், ஒருமா, தேமா)]


திருவருட்பே ரொளிவள்ளல் இராமலிங்க அடிகளெனும் 
திருப்பே ராளர்
மருளுறுத்தும் தெய்வியத்தில் கண்டபல பொய்ம்மைகளை 
மறுத்துச் சொன்ன
ஒருதனிச்செஞ் சிறப்பார்ந்த தூய்துறவி துணிவார்ந்தே 
உண்மை கூறி
உருகிடுநல் அருளுணர்வால் உலகத்தார் உள்ளத்தில் 
உயர்ந்த பெம்மான்!

வழிவழியே வந்தபல துறவுருவர் மொழிமறுத்து 
வழக்கம் மாற்றி
இழிபழிசேர் சாதிமதப் பொய்யினிலே புகுத்தாமல் 
இருள்சேர்க் காமல்
கழிபழியாம் வேற்றுமைகள் களைந்துபொது உணர்வுடனே 
கடமை ஆற்ற
செழிபிழிவாய் ஒற்றுமைதோய் தூயதொரு நல்லவழி 
சிறப்பைச் சொன்னார்!

ஒருதெய்வம் ஒளியென்றார் உருவுமுதற் படியென்றார் 
உண்மை நேய
அருண்மிகுத்தே ஆருயிர்கட் கெல்லாம்நாம் அன்புசெய 
அறிவும் சொன்னார்!
திருக்கோயில் மேளஇசை பழந்தேங்காய் படையலெலாம் 
தேவை இல்லை,
திருத்தமிலா வேதாக மம்புராணங் குழப்பமெனத் 
தெரிந்து சொன்னார்!

கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போகவெனக் 
கடிந்து சொன்னார்!
தண்ணருள்கொண் டெவ்வுயிர்க்கும் பசிபோக்கல் வேண்டுமென்றார்! 
தன்னைக் கூட
விண்தெய்வம் எனமக்கள் சுற்றமனம் வெம்பிநொந்தார்! 
விழைவின் மீறி
வெண்மையினால் கொன்றுபலி யிடுங்கொடுமை கண்டஞ்சி 
விடவும் சொன்னார்!

தருக்கியசங் கரரடங்க தலைமைசொலத் தந்தைமொழி 
தமிழே என்றார்!
உருக்கமுடன் பெண்கல்வி உதவியவர் கைம்மைநிலை 
ஒழிப்பீ ரென்றார்!
ஒருமைப்பாட் டுணர்வுசெழித் தெவ்வுயிரும் தம்முயிராய் 
உணரச் சொன்னார்!
அருளில்லாக் கொடுங்கோலும் ஒழிகவருள் நயந்தோரே 
ஆள்க என்றார்!

இறைக்கொள்கை ஏற்றாருள் இவர்போலும் புரட்சிமனம் 
எவர்க்கும் இல்லை!
முறையான அவருரையில் எதையேற்றோம்? என்செய்தோம்? 
முழுதும் விட்டோம்!
கறைசாதி மதஞ்சுமந்தோம்! கனிவிழந்தோம்! பொதுமைகெடக் 
கரவு சேர்த்தோம்!
நிறைவள்ள லவருரைத்த உயிரொருமைப் பாட்டுணர்வை 
நினைத்த துண்டோ?

6 கருத்துகள்:

  1. //இறைக்கொள்கை ஏற்றாருள் இவர்போலும் புரட்சிமனம்

    எவர்க்கும் இல்லை!

    முறையான அவருரையில் எதையேற்றோம்? என்செய்தோம்?

    முழுதும் விட்டோம்!//

    எம்மை மிகவும் கவர்ந்த வரிகள்.
    புரட்சித் துறவி வள்ளலார் என்ற ஊரன் அடிகளாரின் நூலைப் படித்த நினைவு நெஞ்சில் நிழலாடியது.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் தூய உணர்வுரைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. உண்மை உள்ளத்தராகவும்; மக்களை மெய்யாக நேசித்தவராகவும்; மற்றவர்களுக்காக - மற்றவற்றுக்காக ஒவ்வொரு கணமும் நடுங்கி(பிள்ளைப்பெரு விண்ணப்பம் - ஆறாம் திருமுறை)"கருணையில்லாத ஆட்சி கடுகி ஒழிக!/அருள்நயந்த சன்மார்க்கர் ஆள்க!" என்று இறையருளை உள்ளுருகி ஊனுருகி வேண்டிய குழந்தையுள்ளத்தவராகவும் வாழ்ந்த வள்ளலாருக்குத் தங்கள் பாவலங்கல் அழகுக்கு அழகு!
    அன்புடன்,
    தேவமைந்தன்

    பதிலளிநீக்கு
  4. நம் மக்கள் அறிவுரைகளைப் பார்காது ஆளை மட்டும் வணங்குவார்கள். புத்தரின் கொள்கைகளை விட்டு புத்தரின் சிலைக்குப் பூசை செய்கிறார்கள். அப்படித்தான் வள்ளாலாரின் கருத்துக்களையும் விட்டு விட்டார்கள்.

    பா அருமை.

    பதிலளிநீக்கு