சனி, 29 ஜனவரி, 2022


வித்தியதும் ஆகாதே வீண்!

=========================

 தன் இன்னுயிர் ஈவதற்குமுன்…

வரலாறு காணாத…

ஒப்புயர்வற்ற…

ஒருதனிச் சிறப்பார்ந்த…

அறிக்கை வெளியிட்டு உணர்வு கொளுத்திய…

ஈடற்ற ஈகி…

முத்துக்குமார் நினைவைப்போற்றுவம்!

கடமை உணர்வோம்!

====================================

வித்தியதும் ஆகாதே வீண்!

======================================

(வெள்ளொத் தாழிசை)

இறப்பில் எழுச்சிதந்த எங்கள் குமரா!

மறத்திற்கே நல்லுருநீ; மாத்தமிழர் மானத்

திறத்தை விளக்கும் திரு.

 

தன்னேரில் ஆவணத்தால் தந்தவுயி ரீகத்தால்

தன்னலத்தார் அஞ்ச தமிழிளைஞர் ஏழ்ச்சிகொள 

நன்முத்தே இட்டாயே வித்து.

 

முத்துக் குமாரேயெம் மூத்த பெருமுரசே

செத்தெழுச்சி தந்ததனிச் சீரா! திருவிளக்கே!

வித்தியதும் ஆகாதே வீண்.

====================================================

சனி, 15 ஜனவரி, 2022

தமிழ் வாழ...!

 

தமிழ் வாழ…!

 

பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது;

பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது;

எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை

எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி னாலும்,

தட்டி, சுவர் , தொடர்வண்டி, உந்துவண்டி

தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்’ என்றெழுதி வைத்தே

முட்டிநின்று, தலையுடைத்து முழங்கி னாலும்

மூடர்களே, தமிழ்வாழப் போவதில்லை !

 

தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந்

தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும் !

தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள் தோறும்

தொங்கு கின்ற பலகைகளை மாற்றச் சொல்லிக்

கண்டு நிகர் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும் !

கற்கின்ற சுவடிகளில், செய்தித் தாளில்,

விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம்

விதைத்திடுதல் வேண்டும் தமிழ்; வாழும் அன்றே !

 

-      --- பாவலரேறு ‘தென்மொழி’ பெருஞ்சித்திரனார்.

புதன், 15 டிசம்பர், 2021

மொழியும் மரபும் தமிழரும்

                             மொழியும் மரபும் தமிழரும்


இக்கால் தமிழரக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களில் தொன்மையானது தொல்காப்பியம். அந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களையும் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒவ்வொன்பது இயல்களென இருபத்தேழு இயல்களையும் கொண்டுள்ளது. தமிழின் இலக்கிய இலக்கண மரபை விளக்குவதில் இந்நூல் தலைசிறந்ததாக விளங்குகிறது.

     தொல்காப்பிய ஆசிரியர் இலக்கண இலக்கிய வாழ்வியல் கூறுகளைக் கூறுகையில் பெரும்பாலான இடங்களில் அவருடைய தற்கூற்றாகக் கூறாமல், அவர்க்கு முந்தைய இலக்கண இலக்கிய அசிரியர்கள் கூறுவதாகவே தெளிவுபடக் கூறியுள்ளார்.

     ‘வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே’ என்ற தொல்காப்பியக் கூற்றின்படி கல்விகேள்விகளாலும் குடிப்பண்பாலும் உயர்ந்தவர் மெற்கொண்டு வந்த தொன்னெறி விளக்கப்படுகிறது.

     என்மனார் (என்று சொல்வார்கள்) என்ற சொல்லாட்சி மட்டுமே 74 இடங்களில் தொல்காப்பியரால் பயிலப்பட்டுள்ளது. அதனைப்போன்றே, ‘என்ப’ என்ற சொல்லைத் தொல்காப்பியர் 144 இடங்களில் கையாண்டிருக்கின்றார். ‘மரபு’ என்ற சொல்லை அவர் அறுபதிற்கும் மேற்பட்ட இடங்களில் பயன்படுத்தியிருக்கின்றார்.  இவற்றுடன், எழுத்ததிகாரத்தில் மூன்று இயல்களின் பெயர்கள் நூல்மரபு, மொழிமரபு, தொகைமரபு என அமைக்கப்பட்டுள்ளன. சொல்லதிகாரத்தில் ஓர் இயலின் பெயர் விளிமரபு. இவற்றோடு, ‘மரபியல்’ என்றே ஓர்இயல் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.

இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்கினால், மரபைப் போற்றுதலின் இன்றியமையாமை ஒருவாறு விளங்கக்கூடும். வேலையற்றுப்போய் வீணுக்கு இவ்வளவு முகன்மை தந்துவிட்டதாகக் கருதுகிறவர்கள், மரபைப் போற்றாது இலக்கண வரம்பைக் கைவிட்டு, கண்டமண்டலமாகத் தமிழில் பிறமொழி கலக்க விட்டதனால்தான் ‘மலையாளம்’ என்ற மொழி உருவாகி அம்மொழி பேசுவோர் தம்மை வேற்றாராகக் கருதித் தமிழர்க்கு எதிராக இயங்கக்கூடியநிலை உருவாகியதையும் நுட்ப உணர்வாளர் அறிவர். மரபு நிலை திரியின் மொழிச்சிதைவு ஏற்பட்டு மொழிஅழிவுக்கு வழிவகுக்கும் என்ற உண்மையை உணரமறுப்பது அறிவுடைமையாமா?

இனி, மொழிக்கு முதலில் வரா எழுத்துக்களை இலக்கணம் வரையறுத்திருக்கின்றது. அதில் இரண்டு எழுத்துக்களுக்கு மட்டும் விலக்களிக்கலாம் என ஒருவர்கூற, இன்னொருவர் நான்கைந்து எழுத்துக்களுக்கு விலக்களிக்கலாம் என வலியுறுத்த, நாளை ஒரு வெங்கியோ சங்கியோ மெய்யெழுத்துகளையும் மொழிக்கு முதல் எழுத்துகளாக எழுத வேண்டுமென அடம்பிடிக்கமாட்டார் என்று சொல்லமுடியுமா? இப்போதே, ‘க்ருசாங்கிணி’ என்று கிறுக்கர் எழுதுகின்றாரே!

இவையிருக்க புது மொழியறிவாளி ஒருவர், மொழித்தூய்மையாளரே மொழி அழிவுக்கு வழிவகுக்கின்றனரென்று உண்மைக்குத் தொடர்பில்லா அவருடைய ஆய்வறிவால் உளறுவதைக் காண்கின்றோம். ஐம்பதாண்டுகளுக்கு முன்னர்த் தமிழ்நடை எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறதென கொஞ்சம் முயன்று பார்த்தால்தான் மொழித்தூய்மையாளரின் உழைப்பும் அவர்கள் பட்ட தொல்லை துன்பங்களும் இழிவு அவமானங்களும் பயன்தந்திருப்பதை - முழுமையாக இல்லாவிட்டாலும் பெரியஅளவு தமிழ் மீட்கப்பட்டிருப்பதை உணரமுடியும்.

காலந்தொறும் தமிழ் அழிப்பு முயற்சி வெவேறு உருவங்களில் வெவ்வேறு வகைகளில் இருந்துகொண்டுதானிருக்கின்றது. தமிழ் தன் கட்டுக்கோப்பால் தனைத்தானே காலந்தொறும் காத்துக்கொண்டு வருகின்றது. அந்தக் கட்டுக்கோப்பை சிதைக்க முயல்வார் எவரும் தமிழழிப்பு முயற்சியாளராகவே கருதப்படுவர்.

==============================================================================


வெள்ளி, 30 ஜூலை, 2021

 முதுமுனைவர், செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் ஐயா மறைந்தார்!

========================================




பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழ்ப்பெருங்கடல் இரா.இளங்குமரனார் ஐயா 25-7-2021 ஞாயிறன்று மதுரையில் காலமானார் என்ற செய்தியறிந்து ஆறாத் துயருற்றோம். அவருக்கு விழுப்புரம் தமிழ்ச்சங்கம் வீரவணக்கம் செலுத்துகிறது. அவர் அன்பான அறிவுரைகளை ஏற்று நடக்க முயலவேண்டுமெனத் தமிழிளையோரைக் கேட்டுக்கொள்கின்றது.
===========================================================================
விழுப்புரம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 13-04-2019 காரிக்கிழமையன்று விழுப்புரத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற வந்திருந்த முதுமுனைவர் செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் ஐயாவைப் பற்றித் தமிழநம்பி ஆற்றிய அறிமுக உரையைக் கீழே காண்க:
===========================================================================
இரா. இளங்குமரனார் – அறிமுக உரை – 13-4-2019.
    
தமிழ்க்கடல் இரா. இளங்குமரனார் ஐயாவுக்கு அறிமுகமா? என அவையோர் கருதக்கூடும். ஐயாவைத் தலைசிறந்த தமிழறிஞராகவும், சிறந்த நூலாசிரியராகவும், கருத்தாழமிக்க சொற்பொழிவாளராகவும் அறிந்திருக்கிறோம். என்றாலும், ஐயாவைப்பற்றிப் பல நூல்களிலும், கணிப்பொறித் தேடல்களிலும் திரட்டிய செய்திகளைச் சுருக்கமாக அவையோர்க்குத் தெரிவிக்க விரும்பியே இவ்வுரையை அமைத்தோம் எனினும் இவ்வுரை ஐயாவின் சிறப்புயர்வுகளை முழுமையாகக் கூறும் உரை அன்று.

தமிழ் என்ற மொழியை, அதனோடு இணைந்த வழக்கை, பண்பாட்டை, வாழ்வு முறையைத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்லும் சான்றாண்மையர் பலர் காலந்தோறும் இருந்துவருகிறார்கள். அத்தகைய பெருமக்களது தொண்டினாலேயே, தமிழ் இன்றளவும் செழுமையாகத் திகழ்ந்து வருகிறது. அத்தகு பெரியோரில் தலைசிறந்தவராய் 90-ஆம் அகவையை அடைந்த நிலையிலும் ஒய்வின்றி அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் ஓயாது உழைத்து வரும் அருந்தவப் பெரியாரைப் பற்றி அறிதல் மிகப் பயன்விளைப்பதாகும்

திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1930-ஆம் ஆண்டில் சனவரி 30-இல் பிறந்தார். தந்தையார் படிக்கராமர் என்னும் இராமர், தாய் வாழவந்தம்மையார். இயற்பெயர் கிருட்டிணன். பின்னர் தம் பெயரை இளங்குமரானார் எனத் தூயதமிழில் மாற்றிக்கொண்டார்.

பள்ளிப்பருவத்திலேயே, தம் 14-ஆம் அகவையிலேயே சொற்பொழிவாற்றும் திறனும் பாடலியற்றும் திறனும் பெற்றிருந்தார். தம் 17-ஆம் அகவையில் இருந்தே ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

பின்னர்த் தனியே தமிழ்படித்துச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வழியாக 1951-ஆம் ஆண்டில் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் . மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில காலம் சிறப்புப் பேராசிரியர் (guest lecturer) ஆகப் பணிபுரிந்தார்.

ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தமிழாசிரியர் பணிபுரிந்தாலும், நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர் எனப் பல்வேறு நிலைகளில் பல பணிகளையும் ஈடிணையற்ற வகையில் செய்துவருகிறார்.

தமிழ்ப் பேரறிஞரான ஐயா அவர்கள் இலக்கணம் இலக்கியம் வரலாறு, பாடல்கள், ஆய்வுகள் முதலிய பல துறைகளில் பல்வேறு நிலைகளில் எழுதியுள்ள நூல்கள் ஏறத்தாழ 400 ஆகும். ஐயா எழுதியுள்ள திருக்குறள் ஆய்வுநூல்கள் மட்டுமே 89 ஆகும். “செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம்” நூல் மட்டுமே நாலாயிரத்துத் தொண்ணூறு பக்கங்களைக் கொண்டதாகும். ஐயாவின் நூல்களை ஆய்வு செய்து இளமுனைவர், முனைவர் பட்டங்கள் பெற்றவர் பலராவர்.

பண்டைத் தமிழ் நூல்கள் பலவற்றைத் தமிழர் இழந்தது குறித்துப் பாவாணர் கவலையோடு எழுதுகையில், “பாழான மண்ணுக்கும் படையான சிதலுக்கும் படியாதார் நெருப்புக்கும் பதினெட்டாம் பெருக்கிற்கும் பற்பல பூச்சிக்கும் பகைவரின் சூழ்ச்சிக்கும் இரையான கலைநூல்கள் எத்தனை எத்தனையோ” என்று குறிப்பிடுவார். அவ்வாறு இழந்த தமிழ் நூல்களை மீட்டுத்தந்த, மீட்டுருவாக்கம் செய்தளித்த பெருமைக்குரிய வினையாண்மையாளர் நம் இளங்குமரனார் ஐயா ஆவார்..

பண்டை நூல்களுக்கு, குறிப்பாக இலக்கண நூல்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர்கள், அவர்தம் உரையில் மேற்கோள் காட்டும் நிலையில், பல்வேறு நூற்களிலிருந்தும் பாக்களை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளனர். அவ்வாறு சிதறிக் கிடந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மேற்கோள் பாக்களைக் கண்டு கழிபேருவை எய்திய ஐயா இளங்குமரனார், அவற்றைத் திரட்டி அகர வரிசைப்படுத்தி ‘மேற்கோள் விளக்க நூற்பா அகரவரிசை’ என்னும் பெயருடன் தனிநூலாக அமைத்தார்.

அப் பாக்களை இயற்றிய தனித்தனி ஆசிரியர் பெயரால் அடைவு செய்து பார்த்தபோது, காக்கைப்பாடினியார் பாக்களை ஒருங்கமைத்துப் பார்த்த்தன் பயனாக, ‘காக்கைப்பாடினியம்’ என்னும் இலக்கண நூலை மீட்டுருவாக்கம் செய்து தமிழுலகிற்கு அளித்தார். ஐயா தொகுத்த ‘மேற்கோள் விளக்க நூற்பா அகரவரிசை’ நூலே ஒருவாறு ‘வளையாபதி’யையும் ‘குண்டலகேசி’யையும் ஓரளவிற்கு மீட்டுருவாக்கம் செய்ய உதவியது.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் ஐயா, சிறப்பிடம் பெற்றவராவார். இவர் எழுதிய நூல்களுள், இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, , தமிழர் வாழ்வியல் இலக்கணம், குண்டலகேசி, முதலிய நூற்றுக்கணக்கான நூல்களும், தொகுப்பு நூல்களில், தொல்காப்பியப் பதிப்பு, தமிழ்வளம், தேவநேயம், மறைமலையம், திருவிகவின் தமிழ்க்கொடை, செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம், திருக்குறள் வாழ்வியலுரை. உள்ளிட்ட பல நூல்களும் இவர்தம் தமிழ்ப்பணியை என்றும் நின்று விளக்கியுரைப்பனவாம்.

ஐயாவின் குண்டலகேசி என்னும் பாவியம் 1958 ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது. திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு என்னும் ஐயாவின் நூலை 1963- ஆம் ஆண்டு பண்டிதநேரு வெளியிட்டார். சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு என்னும் ஐயாவின் நூலை 2003-ஆம் ஆண்டு அப்துல் கலாம் வெளியிட்டார்.

ஐயா எழுதிய ‘பாரி’ என்னும் ஆய்வக்கட்டுரையைப் படித்த பாவாணர், “நுங்கள் “பாரி”யைப் பார்த்தேன் முற்றும் சரிதான்.என் அணுக்கராக நீங்கள் இருந்தால் என்னைப் போலவே சொற் பிறப்பு அமைப்பீர்கள்’ - எனப் பாராட்டியுள்ளார்.

ஐயாவின் உரையைக் கேட்டால், தமிழ் மூதாதையருள் உயிர்பெற்ற ஒருவர் வந்து பேசுவது போலிருக்கும் எனில் மிகையன்று. தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் ஐயா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தமிழகம் முழுவதும் திருக்குறள் உரைப்பொழிவுகளும், பிற ஆய்வுச் சொற்பொழிவுகளும் வழங்கி வருகிறார்.

திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தி வருகிறார். ஐயா நடத்திவைத்த திருமணம், புதுமனைப் புகவு, மணிவிழா முதலியவை 4000-க்கும் மேற்பட்டவையாம்.

ஐயாவின் கையெழுத்து அடித்தல் திருத்தல் இல்லாமல் நிரல்பட இருக்கும். ஐயா, இரவில் கூட அறிவெழுச்சியில் கருத்துகள் தோன்றும்போது, இருட்டில் தம் தலைமாட்டில் உள்ள கரிக்கோலால் தாளில் எழுதும் பழக்கம் உடையவர். காலையில் வெளிச்சத்தில் எடுத்துப் பார்த்தால் அவை மிகச் செப்பமான எழுத்துகளாக இருக்கும். அரியதோர் ஆற்றல் இது. ஐயா மிகச்சிறந்த நினைவாற்றல் உடையவருமாவார்.

ஐயாவைபப் பற்றி, "உலகப் பெருந்தமிழர், தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்: வாழ்வும் பணியும்" என்ற ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ஒரு புல் - தன் வரலாறு’ என்னும் தலைப்பில் தன் வரலாற்று நூலை இரண்டு தொகுதிகளாக 2017-ஆம் ஆண்டுவரையும் ஐயா எழுதியுள்ளார்.

திருச்சிக்கருகே அல்லூர் என்னும் ஊரில் தவச்சாலை நிறுவினார். அங்கு, ‘பாவாணர் நூலகம்’ என்ற பெயரில் 17000 நூல்களுடன் அவர் எழுதிய நூல்களையும் கொண்ட நூலகத்தை ஆய்வாளர்கள் பயன்கொள்ளும் வகையில் சிறப்பாக அமைத்துத் தமிழுலகுக்கு அறிவு ஈகையராய்த் திகழ்கின்றார்.
தவச்சாலையில், செவ்வாய்க்கிழமை தோறும் ஐயாவின் மாந்தநேயத் தொண்டு நடைபெற்று வந்ததையெல்லாம் விரித்துரைக்க நேரமில்லை. முதுமை காரணமாக ஐயா இக்கால் மதுரையில் தம் மகனாருடன் இருந்துவருகிறார்.
.
ஐயாவுக்குப் பல்வேறு தமிழ் அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் தந்த பட்டங்கள், விருதுகள், பரிசுகள், தமிழக அரசு தந்தது உட்பட எண்ணிலடங்காதவை எனலாம்.

பொதுநோக்கில், பண்பாட்டுக்குக் காந்தியையும், பொருளியிலுக்குக் காரல் மார்க்சையும், சமூக முன்னேற்றத்துக்குப் பெரியாரையும் பின்பற்றுவதாகக் கூறுவார்.

திரு. வி. க. வை வாழ்வியலுக்கும் மறைமலையடிகளை தனித்தமிழ் உணர்வுக்கும் இலக்குவானரை தமிழ்த் தொண்டுக்கும் பாவாணரை சொல்லலாய்வுக்கும் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்வார்.

ஐயா இளங்குமரனார் ஆழ்ந்த புலமையர்; இலக்கணப் புலவ,ர்; இலக்கியச் செல்வர்; பெருஞ்செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட ஆழ்கடல் போலும் அமைதியர்; எந்த ஒன்றையும் நுணுகி நோக்குவதும் அகப்புறச் சான்றுகளால் அறுதியிடுவதும் இவர் புலமையின் இயல்புகள். தமிழ்மரபு காக்குநர்; நுழைபுலமிக்க ஆய்வாளர்; கற்றதை விரித்துரைக்க வல்ல சொல்லாற்றலர்; குறள் கூறும் செந்நெறியில் ஒழுகும் செம்மல். தமிழநூற் பரப்பின் எல்லையைக் கண்டவர். இலக்கிய இலக்கணச் சிந்தனைகளில் மூழ்கி முத்தெடுப்பவர்.

தமிழ் மொழி, இன.நாட்டுப் பற்றில் முதன்மையானவர். தமிழீழ விடுதலையில் மிகுந்த நம்பிக்கை உடையவர். உலக வரலாறுகள் கற்றவர். பாவாணர், திரு.வி.க.வாழ்வியலை மிக உயர்வாக மதிப்பவர். மூத்த அறிவுடையோருடன் கேண்மையுடையவர். தமிழ்மான உணர்வும் தன்மான உணர்வும் நிரம்பப் பெற்றவர். தமிழ் இலக்கியங்களைக் குறைத்து மதித்தவரையும், தமிழ்மொழியை இழித்தவரையும் முறையே தக்க சான்றுகளுடன் மறுக்கப் பொங்கியெழுந்து சீறிப்பாயும் மான மற வேங்கையெனத் திகழ்பவர்

தமிழ் தமிழர் நலன்கருதி வாழும் அறிவார்ந்த ஐயா அவர்களை இற்றைத் தமிழ் இளையோர் தம் வழிகாட்டியாகக் கொண்டு உழைப்பாராகில், தமிழ் தமிழர் தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டு தமிழர் வாழ்வும் வரலாற்றுப் பீடும் மேலுயர்த்தப்படும் என்பதில் ஐயமில்லை என்ற விழைவைத் தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து முடிக்கின்றேன், நன்றி, வணக்கம்!
==========================================================================



வெள்ளி, 2 ஏப்ரல், 2021



   பெரியார் தொண்டர், தமிழ், தமிழினநலப் போராளி “முத்தமிழடியான்” மறைவுற்றார்!

    விழுப்புரத்தில் அச்சகத்துறைத் தொழிளியாக இருந்து, தம் 55-ஆம் அகவைக்குப் பிறகு, பெரியார் கொள்கைகளிலும் தமிழ், தமிழின நலன்களிலும் கருத்துச்செலுத்தி அதற்கான செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர் ஐயா, முத்தமிழடியான் ஆவார். முத்தமிழ்தாசன் என்ற தம் பெயரை தூயதமிழ் உணர்வின் உந்துதலால் முத்தமிழடியான் என்று மாற்றிக்கொண்டவர்.    

    மூடநம்பிக்கைகள ஒழித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்ட ‘மந்திரமா, தந்திரமா?’ நிகழ்ச்சிகளைப் பல இடங்களிலும் பலமுறை நடத்திக்காட்டி மக்களுக்குத் தெளிவூட்டியவர். தமிழ் தமிழர் நலன் தொடர்பான எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்பவர். தாய்த்தமிழ்ப்பள்ளி செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டுத் துணைநின்றவர் முத்தமிழடியான் ஆவார்.

     எண்பத்து எட்டாம் அகவையில், முதுமை நோய்த்தாக்கத்தால் நேற்று (1-4-2021) விடியற்காலை 5 மணியளவில் காலமான முத்தமிழடியானின் உடல் பகல் பன்னிரண்டு மணியளவில் விழுப்பரம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

     தமிழ், தமிழர் நலன்காக்க நம்மை ஈடுபடுத்திக் கொள்வதே முத்தமிழடியான் அவர்களுக்கு நாம் அளிக்கும் பெரு மதிப்பாகவும் போற்றுதலாகவும் அவருக்குச் செலுத்தும் வீரவணக்கமாகவும் அமையும்!

==============================================================================

   


புதன், 8 ஜூலை, 2020


சாத்தான்குளம்… தூத்துக்குடி நிகழ்வுகளுக்குத் தீர்வு உண்டா?           தொடர்ந்து படியுங்கள்...!
-------------------------------------------------------------------
காவல்துறையின் வன்கொடுமைகளுக்கு (Torture) எதிராக,  தில்லி, மதராசு உயர்நயன்மன்றங்களின் தலைமை நயனர் (Chief Judge) ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. அசித் பிரகாசு சா, சூலை 3, 2020 ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் காண்க:

===========================================================

இந்தியாவின் வன்கொடுமைப் (Torture) பண்பாடு 

இப்போது முடிவடைதல் வேண்டும்!


வழக்கறிஞர் குழாம், ஊடகங்கள், குடிமக்கள் 

குழுகாயம், மாணவர் குழுக்கள் உள்ளடங்கிய

 மக்கள் மட்டுமே வன்கொடுமை (Torture) 

நடைமுறைகளுக்கு எதிராக எழ முடியும்!

            
               இப்பொழுது ஒவ்வொருவரும், ஒரு சிறிய நகரான தூத்துக்குடியில், அப்பாவும் மகனுமான இரட்டையர் பி.செயராசு, செ.பெனிக்கிசின் துயரச் சாவு பற்றிக் கேள்விப்பட் டிருக்கிறார்கள். செயராசு 58, ஊரடங்குச் சட்டங்களை மீறி அவருடைய மகனின் கைப்பேசிக் கடையைத் திறந்திருந்ததைப் பற்றிய வாய்ச்சண்டையை யொட்டித் தளை செய்யப்பட்டார். பெனிக்கிசும் தளைப் படுத்தப்பட்ட பிறகு, இருவரும் இரக்கமின்றி நையப்புடைத்துச் சாகடிக்கப்பட்டனர்.  

            ஊரடங்கின் போது கடையைத் திறந்து வைத்துக் கொண்டிருந்த குற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், செயராசுக்கும் பெனிக்கிசுக்கும் இயல்பாக அதிக அளவு மூன்று மாதச் சிறை மட்டுமே வழங்கப் பட்டிருக்கும்.  இரங்கத்தக்க இந்தக் கதை, காவல்துறையோடு மட்டும் முடிய வில்லை. அவர்கள் இருவரும் இறந்ததற்கு முன்னால், காவல்துறை, நயன்மன்ற வளாகத்தில் இருந்த ஒரு நடுவரை அவர்களைக் காவலில் வைக்க நாடியிருக்கிறது. அவர், அந்த இருவரையும் நேரில் கூட பார்க்காமலும், அவர்களைக் காவலில் வைக்க உள்ளார்ந்த காரணங்களைக் கேட்டறியக் கூட முற்படாமலும், எந்திரத்தனமாக இசைவு வழங்கியிருப்பதாகத் தெரிகிறது. கொடுமையான ஊரடங்குச் செயற்படுத்த முறைகள் தொடங்கி, முற்றிலும் கொடிய, விலக்க முடிந்திருக்கக் கூடிய இறப்புகளுடன்  முடிந்த, தொடர்ச்சியான நிகழ்ச்சிகள், நாம் முழுமையாகத் தகர்ந்துபோன சட்ட நடைமுறைப் படுத்தும் அமைப்புடன் வாழ்கிறோம் என்பதற்கு அறிகுறியாக இருக்கின்றன.

காவல்துறைப் பண்பாட்டின் நோய்:

            தமிழ்நாட்டுக் காவல்துறை, சட்டத்தைச் செயற்படுத்தப் பல பத்தாண்டுகளாக வன்கொடுமை (Torture) முறைகளைப் பயன்படுத்திக் கெட்ட பெயர் எடுத்திருக்கின்றது. மதராசு உயர்நயன் மன்றத்தின் தலைமை நயனராக இருந்த என் பணிக்காலத்தின் போது, இதைப் போன்ற பல்வேறு வழக்குகள் நயன்மன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டன. ஆனால், இந்தச்சிக்கல் தமிழ்நாட்டுக்கு மட்டும் வரையறைப் படுத்தப் பட்டதன்று. வன்கொடுமை, நாடு முழுமையிலும் காவல்துறைப் பண்பாட்டில் உண்மையாகவே ஒருங்கமைந்த பகுதியாக இருக்கின்றது. இந்தப் பண்பாடு, இந்தியாவை ஆட்சி செய்த அயலவர் காவற்படையின் கொடுஞ்செயல்களின் எச்சமாக, இன்றைய இந்தியாவில் நாமும் மறக்க விரும்புவதாக இருந்துகொண்டு இருக்கிறது என்பது தவறாக உறழாடுவது ஆகாது. 
         
            அதிகார அடிப்படையிலான தரவுகளும் இந்தக் காவல்துறை வன்கொடுமை உண்மையானது என்று ஒப்புக்கொள்கின்றன. ஆனால், அந்தத் தரவுகளின் தகுதி எப்போதும் ஐயத்திற்கு உரியதாக இருக்கிறது. மாந்தர் உரிமைக்கான ஆசிய நடுவம், பன்னாட்டு பொது மன்னிப்பு அமைப்பு, மக்களாட்சி உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் உள்ளிட்ட அரசுசாரா அமைப்புகள், நோக்கர்களின் ஆண்டாண்டு அறிக்கை வழி அறியப்படும் உண்மைகளையும் காரணங்களையும் கொண்ட வழக்கில், காவல் துறையின் படர்ந்து பரவுகிற வன்கொடுமைகளை மிக நன்றாகப் புரிந்துகொள்ளலாம்.

            வன்கொடுமை குறித்த தரவுகள், இந்திய காவல்துறை பண்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக மட்டும் வன்கொடுமையைக் காட்டவில்லை, மாறாக, சில புலனாய்வுகளில் {பேரச்சக் கொடுஞ்செயல் (terror) போன்ற வழக்குகளில்} அது நடுவப் பகுதியாகவே கருதப்படுகிறது. உண்மை என்னவென்றால், நடைமுறையிலுள்ள சட்டங்களில் {பேரச்சக் கொடுஞ்செயலர், சீர்குலைவுச் செயற்பாட்டாளர் (நீக்கச்) சட்டம், பேரச்சக் கொடுஞ்செயல் விலக்கச் சட்டம், மகாராட்டிரா திட்டமிட்ட குற்றங்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் போன்றவையாக அவை புதுப்பிக்கப்பட்டுள்ள சட்டம்-ஆகியவற்றில்} குற்ற ஏற்புரையை(confession),சான்றாக ஏற்க, இசைந்ததின் ஊடாக, அத்தகைய வன்கொடுமைகளுக்குத் துணைதந்து ஊக்குவிக்கின்றன. வாய்ப்புக் கேடாக, காவல் துறையில், சட்ட நடைமுறைப் படுத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இனமரபுக் கூற்றுக் காடி (DNA) பகுப்பாய்வு போன்ற புதிய தொழில் நுட்பங்களை திறம்புதுப்பித்து உயர்த்தல் முன்னெடுக்கப்படவில்லை. 

இந்தியாவின் “ஊரறிந்த கமுக்கம்” என்று சிலரால் அடையாளமிடப்பட்டது, பன்னாட்டுச் செயற்களத்தில்  நேரடியாகக் கையாளப்படாமல் தவிர்க்கப் படுகின்றது. அரசு அறிமுகப்படுத்திய அல்லது அரசு ஏற்றுக்கொண்ட வன்கொடுமையின் அதிகார பூர்வமான நிலையை 2017-இல் அப்போதைய தலைமை-வழக்கறிஞரின் (Attorney-General) மேற்கோளில் பார்க்க முடியும். செனிவாவில் ஒன்றிய நாடுகளின் மாந்த உரிமை மன்றத்தில் இந்தியாவினுடைய உலகந்தழுவிய ஆண்டு மீளாய்வுக் கூட்டத்தில் நிகழ்த்திய தொடக்க உரையில், தலைமை-வழக்கறிஞர், காந்தியையும் புத்தரையும் குறிப்பிட்டுள்ளார். அவர், “இந்தியா… அமைதியில், வன்முறையின்மையில், மாந்தர் கண்ணியத்தைக் காப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. அவ்வாறே, வன்கொடுமை கருத்து எங்களுடைய பண்பாட்டுக்கு முற்றிலும் புறம்பானது; நாட்டின் ஆட்சி முறையில் அதற்கு இடமேயில்லை.” என்று கூறினார்.  இதுவே பாசாங்குத் தனத்திற்கு, பாடப் புத்தக எடுத்துக் காட்டாக இருக்கும்.

            ஐயத்திற்கு இடமின்றித் தூத்துக்குடி வழக்கில் குற்றம் செய்த அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுக்கொண்டிருக்கிறது, பலியானோர் குடும்பத்திற்குக் கொஞ்சம் இழப்பீடு கூட அளிக்கப்படும். ஆனால், அத்தகைய துண்டுத் துணுக்கான நடவடிக்கை, தேவையானதைச் செய்யாது. நமக்கு உண்மையான தேவை என்னவென்றால், வன்கொடுமை நாடு சார்ந்த காவல்துறைப் பண்பாட்டின் நோய், கட்டமைப்பு சார்ந்த சிக்கலாக இருக்கின்றது என்ற ஏற்பிசைவாகும். அந்தச் சிக்கலுக்கான தீர்வு, இந்தியா 1997-இல் கையெழுத்திட்டுள்ள ‘ஒன்றிய நாடுகள் வன்கொடுமைக்கு  எதிரான ஒபந்தத்தின் (UNCAT) படியான, பன்னாட்டுச் சட்டத்தின் நெறிகளைத் தளர்வின்றி நடைமுறைப்படுத்துவதன் மூலமும், அதை மிகுந்த இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதன் மூலமும் ஆகும்.

வன்கொடுமை பற்றி உச்சநயன்மன்றம்:

            ஒன்றிய நாடுகள் வன்கொடுமைக்கு  எதிரான ஒபந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவதற்கு முன்பே, நம்முடைய உச்சநயன்மன்றம், நாட்டின் வன்கொடுமை பண்பாட்டினால் விளைந்த பல சிக்கல்களை முனைப்பாக எடுத்துக்காட்டிப் புகழ்வாய்ந்த சட்டக்கோட்பாட்டைக் கொண்டுவந்தது.  அரியானா அரசுக் கெதிரான இரகுபிர்சிங் வழக்கில் (1980) நயன்மன்றம், “திரும்பத்திரும்ப நிகழும் பேய்த்தனமான காவல்துறை வன்கொடுமைகள் - சட்டத்தின் காப்பாளர்கள் மாந்த உரிமைகளைக் குத்திக் கிழித்துச் சாகடிக்கும் பொழுது, பொது குடிமக்கள் மனத்தில் மோசமான அச்சத்தை உருவாக்கி, அவர்கள் வாழ்வையும் உரிமையையும்  நெருக்கடியில் உள்ளாக்கியிருப்பதைக் கருதி நயன்மன்றம் ஆழ்ந்த கலக்கத்திற் காளாகி யிருக்கிறது.” – என்றது.  இந்த உணர்ச்சிவயக் கருத்துக்கள், பிரான்சிசு கொராலி முல்லின் ஒன்றிய அரசின் ஆட்சிப்பகுதியாகிய தில்லிக்கு எதிரான வழக்கிலும் (1981), சீலா பார்சி மகாராட்டிர அரசுக்கெதிரான வழக்கிலும் (1987) மீளக்கருதிப் பார்க்கப்பட்டது. இவ் வழக்குகளில், கொடுமைப்படுத்தலும் வன்துன்புறுத்தலும் சட்டக் கூறு 21-ஐ மீறுகிறது என்று நயன்மன்றம் கண்டித்தது. சட்டக்கூறு -21-றிற்கான இந்தப் பொருள் விளக்கம் ‘ஒன்றியநாடுகள் வன்கொடுமைக்கு  எதிரான ஒப்பந்தம்’ கொண்டுள்ள நெறிகளை உள்ளடக்கியிருக்கின்றது. ஒன்றியநாடுகள் வன்கொடுமைக்கு  எதிரான ஒப்பந்தம்  உலகெங்கிலும் வன்கொடுமையையும் அதைச்சார்ந்த துன்புறுத்தல்களையும்  விலக்கவும், பிற கொடிய, மாந்தத் தன்மையற்ற அல்லது இழிவுபடுத்துகிற நடைமுறை அல்லது தண்டனை அளிக்கும் செயல்களை  நீக்குவதையுமே நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

            இந்தியா, ஒன்றியநாடுகள் வன்கொடுமைக்கு  எதிரான ஒப்பந்தத்தில் 1997-இல் கையொப்பமிட்டிருந்த போதிலும், அது இன்னும் அதிகார பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 2010-இல் ஒரு வலுக்குன்றிய வன்கொடுமை தடுப்புச் சட்ட முன்வரைவை மக்களவை நிறைவேற்றியது. மாநிலங்களவை, பின்னர் அதனை, ஒன்றியநாடுகள் வன்கொடுமைக்கு  எதிரான ஒப்பந்தத்துடன் நேரமைந்திருப்பதை மீளாய்வு செய்ய தேர்வுக் குழுவிற்கு (select committee) அனுப்பியது. (நானும் கூட நயன்துறைப் பணியிலிருந்து பணி ஓய்வுக்குப் பின் 2010-இல் இக் குழுமுன் கருத்துரைத்திருக்கிறேன்). 2012-இல் அந்தக் குழு பரிந்துரைத் தளித்த சட்டம், பயனளிக்கவில்லை. அப்போதைய ஒன்றிணைந்த முற்போக்குக் கூட்டணி அரசு, அந்தச் சட்டவரைவை கால எல்லை கடக்கவிட்டு விட்டது. 2016-இல், மூத்த வழக்கறிஞரும் முன்னாள் ஒன்றிய அரசின் சட்ட அமைச்சருமான அசுவனிகுமார், வேண்டுகைமடல் வழி ஒரு வன்கொடுமை சட்டம் இயற்ற உச்சநயன்மன்றத்தை நாடினார். 2017-இல், சட்டக்குழு அதனுடைய 273-ஆம் அறிக்கையையும் வன்கொடுமை சட்ட முன்வரைவையும் அளித்தது. ஆனால், அரசைக் கட்டாயப்படுத்தி சட்டமியற்றும் உரிமை தனக்கில்லை என்று கூறி உச்சநயன்மன்றம் அந்த வேண்டுகையை, தள்ளுபடி செய்துவிட்டது.  ஒப்பந்த உறுதியளிப்பு அரசியல் முடிவு; அது கொள்கை தொடர்பான முடிவு என்றது. இந்தச் சிக்கல் தொடர்பான திரு.குமார் அவர்களின் இரண்டாவது வேண்டுகையும் முதலாவதைப் போன்றே முடிந்தது.

            உச்சநயன்மன்றம் இப்படித் தள்ளுபடி செய்தது அதன் சொந்த புகழ்வாய்ந்த சட்டக் கோட்பாட்டையும், கடந்த காலத்தில் அது உதவிய பல்வகை சட்ட வடிவங்களையும் - பெண்களுக்கு எதிரான அனைத்து வகைப் பாகுபாட்டை நீக்கி, வேலை செய்யுமிடத்தில் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தைச் சீர்திருத்தல் - சுற்றுச்சூழல் வழக்குகளில் வழக்கமாக்கப்பட்ட பன்னாட்டுச் சட்டங்கள் - தனியாண்மை உரிமை – (முன்கூட்டிச் செயற்படும் ஒரு நயன்மன்றத்தை வெளிப்படுத்தும் இந்த நீண்ட பலவகைப்பட்ட பட்டியல், பாராளுமன்றத்தைச் சட்டமியற்றும் செயற்பாட்டில் தூண்டும் பொறுப்பைக் கொண்டுள்ளது), அதன் முயற்சிகளையும் புறக்கணிக்கும் அடையாளமாக இருந்தது.     தவறுகைகளுடனும் கூட, அந்தக் குழுவின் முன்சட்டவரைவு, ஒன்றும் இல்லாததைவிட மேலாக இருந்தது.  இந்தச் சட்டவரைவை அடிப்படையாகக் கொண்ட ஒரு வடிவம் மாநில அரசுகளுக்கு அவற்றின் கருத்தறிய சுற்றுக்கு விடப்பட்டது. ஆனால், எந்தக் கருத்தும் வரவில்லை; எதுவும் வரப்போவதாகவும் தெரியவில்லை. இந்தத் தயக்கம், எல்லா அரசுகளும் காவல்துறையின் கொடுஞ்செயல்களைச் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் தேவையான தீச் செயல் என்று ஒட்டுமொத்தமாக ஒப்புக் கொள்வதைப்போல் தோன்றுகிறது.

வன்கொடுமையை இன்றே முடிக்க!

            உள்துறை அமைச்சகமோ அல்லது இந்த அரசோ வன்கொடுமை சட்டத்தை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. உண்மையில், வன்கொடுமை சட்டவரைவு நடத்திய பாங்கு, அடுத்தடுத்த அரசுகளால் இந்திய மக்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்பதை வெளிப் படுத்துகிறது. வன்கொடுமை தொடர்பான சட்டத்தை இயற்ற 23 ஆண்டுகளாக வாய்ப்புகள் இருந்திருந்தும் அவ்வாய்ப்புகள் வேண்டு மென்றே தவிர்க்கப்பட்டன. மாநில அரசுகளைக் கலந்தாய்வு செய்வதென்பதும் பொருளற்றதாகும். காவல்துறை தற்பாதுகாப்புக் கருவியாகப் பயன்படுவதால், எல்லா அரசுகளும் இருக்கும் நிலையே நீடிப்பதைத் துய்க்க விரும்புகின்றன என்பது புலனாகின்றது. எந்த சமநிலைக் குலைவும் அரசியலில் விரும்பப்படவில்லை. 

             ஊக்கம் கெடுப்பதாக இது தெரிந்த போதும், எல்லாம் இழந்துவிட வில்லை. நம்மைச் சுற்றி ஊக்கத் தூண்டுதலும் மிகுதியாக இருக்கின்றது. சியார்சு பிளாயிடை ஒரு காவலர் அமெரிக்க மின்னியாபொலிசில், 8 நிமையம் 46 நொடிகள் மூச்சுவிட முடியாதபடி கழுத்தை அழுத்திக் கொன்றதனால், ”கறுப்புயிர்களும் இன்றியமையாதவை” இயக்கம் மேலெழுந்தது. அதில் பல இந்தியர்களும் கூட சேர்ந்து கொண்டனர். அந்த இயக்கம் மக்களால் வழிநடத்தப்பட்டது; காவல் துறைக்கு தொகை ஒதுக்காமலிருத்தல், காவல் துறையின் வலுக்குறைத்தல் உள்ளிட்ட அமெரிக்கக் காவல்துறை பற்றிய முனைப்பான சீர்திருத்தங்கள் குறித்துத் தேசிய அளவிலான கருத்துரையாடல்களைத் தொடக்கியது. ஏற்கக்கூடிய வகையில் நம் நாட்டிலும் கூட சட்டக்குழு கருத்துரைத்தபடி, சட்ட மாற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலம் நிறுவனங்கள் ‘வன்கொடுமையை  இன்றே முடிக்க’ ஒரு மக்கள் இயக்கம் தேவைப்படுகின்றது. உலகின் மற்ற பகுதிகளில் எழுந்ததைப்போல இந்த வன்கொடுமைகளுக்கு எதிராக மக்கள் எழுச்சிமட்டுமே பயனளிக்கும். “மக்கள்” என்பதன் மூலம் நான், முகன்மையான பங்களிப் பாளராகிய வழக்கறிஞர் குழாம், ஊடகங்கள், குடிமக்கள் குமுகாயம், மாணவர் குழுக்களை உள்ளடக்குகிறேன்.  இவர்கள் ஒவ்வொருவரும், நாம் விரும்பும் மாற்றத்திற்கு ஆற்ற வேண்டிய பங்குப் பணியுள்ளது. யார் முதலில் பொறுப்பை ஏற்க முடிவு செய்ககிறார்கள் என்பதை மட்டுமே பொருத்தது அது.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கும், கட்டுரை ஆசிரியர் அசித் பிரகாசு சா அவர்களுக்கும் நன்றி!

                                           
           
                         
   

சனி, 1 பிப்ரவரி, 2020

புதுச்சேரி வரலாற்றுச் செய்திக் குவியலாக ஒரு நாள்காட்டி


புதுச்சேரி வரலாற்றுச் செய்திக் குவியலாக ஒரு நாள்காட்டி          

==================================================================            
 


     புதுவை அருங்காட்சியகத் திட்டத்தில், தாழி ஆய்வு நடுவத்தின் ஆக்கத்தில், அன்னை அருள் கட்டளையின் வெளியீடாக 2020-ஆம் ஆண்டு நாள்காட்டி ஒன்று வந்திருக்கின்றது. 28-1-2020 அன்று அன்பர் அத்திப்பாக்கம் கணியனார் வழி அந் நாள்காட்டியைப் பெற்றேன்.

நாள்காட்டியின் முதல்தாள் முகப்பில் புதுச்சேரி நகரத்தின் வரைபடம் உள்ளது. புதுச்சேரி நகரம் 1827-இல் வெள்ளை நகரமென்றும் கருப்பு நகரமென்றும் பிரிக்கப்பட்டிருந்த செய்தி இருந்த்து. ஆம்பூர்சாலை, செஞ்சிசாலைக்கு இடையிலிருக்கும் கால்வாயிலிருந்து கிழக்கே கடற்கரை வரையிலான பகுதி வெள்ளை நகரமென்றும், கால்வாயிலிருந்து மேற்குப்பகுதி (பொலிவார்டு) அலங்கம்(அரண்) வரையிலான பகுதி கருப்பு நகரமென்றும் பிரிக்கப்பட்டிருந்த செய்தி உள்ளது. வெள்ளையர் நகர்ப்பகுதியில் பிறர் குடியேறத் தடை இருந்திருக்கிறது. 1777-இல் புதுச்சேரி நகரத்திலிருந்த தெருக்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

நாள்காட்டியின் ஆவணப்பணி, புதுச்சேரி வரலாற்றுப் பதிவுக்கு உழைப்பளித்த இழான் தெலோசுக்குப் படையலிடப்பட்டுள்ளது. நாள்காட்டியின் முதல் தாளின் இரண்டு பக்கங்களிலும், புதுவை அருங்காட்சியகத் தேசிய மரபு அறக்கட்டளைப் பொறுப்பாண்மையர் .அறிவன் தந்துள்ள செய்திகளை அறிகையில் வியப்பும் கவலையும் மேலோங்குகின்றன.

இந்திய-பிரெஞ்சு அருங்காட்சியக மொன்றின் அமைப்புக்காக மேற்கொண்ட முயற்சிகள் புதுச்சேரி அளவில் ஒத்துழைப்பின்மையால் தடைபட்டுவரும் நிலை, நேர்ந்த தொல்லைகள் துன்பங்கள் படிக்கையில் மனம்நோகச் செய்வனவாக உள்ளன, புதுச்சேரி வரலாற்றுத் தேடல் தொடர்ந்துகொண் டிருப்பதும், நூற்றுக்கணக்கான படங்களைக் கொண்ட புதுவை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டதும் சிறப்பு நூலகப்பிரிவு தொடங்கிய செய்தியும் ஆறுதலளிப்பன. இத்தகு முயற்சிகளில் துணைநின்றார் நன்றியுடன் குறிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி நகரத்தின் பெயர்கள், ஆனந்தரங்கர் நாட்குறிப்பு, வீரா (நாயக்கர்) நாட்குறிப்பு, பல்வேறு அகராதிகள் ஆகியவற்றில் எவ்வெவ்வாறு தரப்பட்டுள்ளன என்ற செய்தியும் உள்ளது. புதுவை நகரிலுள்ள தெருக்களின் பெயர்கள் அரசிதழில் உள்ளவாறு பட்டியலிடப் பட்டுள்ளதோடு, தெருக்களைப்பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. பிரெஞ்சிந்திய ஆளுநர்களின் பெயர்களும் காலவாரியாக தரப்பட்டுள்ளன.

மாத நாள்காட்டியின் ஒவ்வொரு மாதப் பக்கத்திலும் கீழே நாள்காட்டியும் மேலே செய்திகளும் படங்களும் இடம்பெற்றுள்ளன. நாள்காட்டியின் நீளம் இரண்டடி; அகலம் ஒருஅடி ஐந்து விரற்கடை யாகும். நாள்காட்டியின் மாத, கிழமைப் பெயர்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் ஆகிய மும் மொழிகளிலும் தரப்பட்டுள்ளன.

சனவரி மாதப் பக்கத்தில், சோழமண்டலக் கடல்(கரை) என்ற தலைப்பில், சோழர்களைப்பற்றிய சிறு குறிப்பு உள்ளது. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுமத்தைப் பற்றிய செய்தி உள்ளது. புதுச்சேரியின் நகரத் தந்தை என்றழைக்கப்பட்ட பிரான்சுவா மர்த்தேன் பற்றிய செய்தியும் பிறவும் உள. புதுச்சேரி நகரத்தின் கிழக்குக் கடற்கரையைக் காட்டும் சிறு வரைபட மொன்றும் பெயர் குறிப்பிடப்படாத ஐந்து தலைவர்களின் படங்களும் உள்ளன.

பெப்ருவரி மாதப் பக்கத்தில், அலங்கம் என்ற தலைப்பில் புதுவை நகரின் நான்குதிசை அலங்கங்களையும் காட்டும் வரைபடமொன்றும் தலைவர்கள் பதினொருவர் படங்களும் இரண்டு கட்டடகளின் படங்களும் ஒரு பிள்ளையார் படமும் உள்ளன. படங்களைப்பற்றிய குறிப்போ பெயர்களோ இல்லை.

மார்ச்சு மாதப் பக்கத்தில், தூய இலூயி என்ற தலைப்பில் அவரைப் பற்றிய சிறு குறிப்பு உள்ளது. தூய இலூயி என்ற பெயரில் புதுச்சேரி நகரில் கோட்டை கட்டப்பட்ட செய்தி உள்ளது. புதுவை நகரப் பகுதி யொன்றின் சிறு வரைபடமும் நேரு, பட்டேல், போசு, அண்ணா, சுப்பையா முதலிய பதின்மரின் படங்களும் இடம்பெற்றுள்ளன. பெயர்கள் குறிக்கப படவில்லை.

ஏப்பிரல் மாதப் பக்கத்தில், திப்புசுல்தான் என்ற தலைப்பில், அவரைப் பற்றிய சிறு குறிப்பு உள்ளது. புதுவை நகரப் பகுதியொன்றின் சிறு வரைபடமும், கோயில், பள்ளிவாசல், திருச்சவை படங்களும் உள. காந்தி, திப்பு, ஐதர்அலி படங்களுடன் இன்னொருவர் படமும் உள்ளது.

மே மாதப் பக்கத்தில், நிடமாமல்ல இராசப்பர் என்ற தலைப்பில், பிரெஞ்சு, ஆங்கிலம் இந்திய மொழிகள் தேர்ந்த அவரைப் பற்றிய சிறுகுறிப்பு காணப்படுகிறது. . புதுவை நகரப் பகுதியொன்றின் சிறு வரைபடமும் இரு கட்டடங்களின் படமும் பெயர் குறிக்கப்படாத அறுவர் படங்களும் உள்ளன.

சூன் மாதப் பக்கத்தில் பெருமாள் என்ற தலைப்பில் புதுவை வரதராசப் பெருமாள் கோயில் பற்றிய குறிப்பு உள்ளது. புதுவை நகரப் பகுதியொன்றின் வரைபடமும் உள்ளது. கோயில் குளம் தெருவைக் காட்டும் நான்கு படங்கள் உள்ளன. பெயர் குறிப்பிடாமல், அரவிந்தர் முதலிய நால்வர் படங்கள் உள.

சூலை மாதப் பக்கத்தில், பாரதி என்ற தலைப்பில் அவரைப் பற்றியும் அவருடைய புதுச்சேரித் தொடர்பு பற்றியும் குறிப்பு உள்ளது. நகரப் பகுதியொன்றின் சிறிய வரைபடம் உள்ளது. பல்வேறு தொழிலாளர்களின் தொழில்களைக் குறிக்கும் ஏழு படங்கள் உள்ளன.

ஆகத்து மாதப் பக்கத்தில், வேதபுரி ஈசுவரர் கோயில் என்ற தலைப்பில், அக் கோயிலைப் பற்றிய அரிய குறிப்பு தரப்பட்டுள்ளது. கோயிலின் படமும் நகரப் பகுதியொன்றின் சிறு வரைபடமும் உள்ளன. ஆசிரியர் மாணவர்களோடு பள்ளி வகுப்புகள் ஐந்தின் படங்களும், இரண்டு கட்டடங்களின் படங்களும் உள்ளன.

செபுதம்பர் மாதப் பக்கத்தில், பொன்னுத்தம்பி என்ற தலைப்பில், பிரெஞ்சிந்தியர், வழக்கு மன்றத்திற்கு உள்ளே காலுறையும் காலணியும் அணிந்து செல்லும் உரிமையைப் போராடி, வழக்காடி வென்று பெற்றுத் தந்த பொன்னுத்தம்பி என்ற வழக்கறிஞரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நகரப் பகுதியொன்றின் சிறு வரைபடமும், மணிக்கூண்டுப் படமும், இரண்டு கட்ட்டங்களின் படமும், இலால்பகதூர் சாத்திரி, சீவானந்தம் முதலிய எழுவரின் படங்களும் உள்ளன.

அக்குதோபர் மாதப் பக்கத்தில், நைனியப்பர் என்ற தலைப்பில், தரகராயிருந்த அவரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் தரப்பட்டுள்ளன. நகரப்பகுதியொன்றின் சிறு வரைபடமும், ..சி., பாவேந்தர், பாவலர்கள் தமிழ்ஒளி, வாணிதாசனார், திருமுருகனார் முதலிய பதினொருவர் படங்களும் பெயர் குறிப்பிடப்படாமல் காணப்படுகின்றன.

நவம்பர் மாதப் பக்கத்தில், பெத்ரோ கனகராயர் என்ற தலைப்பில் அவரைப் பற்றிய சிறு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நகரப்பகுதியொன்றின் சிறு வரைபடமும், பெயர் குறிப்பிடப்படாமல், காமராசர் முதலிய 26பேரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.

திசம்பர் மாதப் பக்கத்தில், தெபேர் என்ற தலைப்பில், தெபேர் உருவாக்கிய வரைபடம் பற்றிய வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. தெபேரின் படமும் இன்னொருவரின் டமும் பெயர் குறிப்பிடப்படாமல் இடம்பெற்றுள்ளன. புதுவை நகர்ப் பகுதியின் சிறு வரைபடம் உள்ளது. புதுச்சேரித் தொடர்புடைய பிரெஞ்சுக்காரர்கள், புதுச்சேரிக்காரர்கள் பலரின் பெயர்கள் பல நீள்வட்டங்களிலும், கட்டங்களிலும், கைகாட்டிகளிலும், பிற அடைப்புகளிலும் தரப்பட்டுள்ளன.

நாள்காட்டி உருவாக்கத்திற்கான அரிய முயற்சியும், ழைப்பும் உணரமுடிகிறது. பாராட்டிற்குரிய பணி. நாள்காட்டியிலுள்ள செய்திகளைச் செப்பமாக்கி முறைப்படுத்தி நூலாக ஆக்கினால் ஓர் அரிய ஆவணமாக நிலையாகப் பேணிக்காக்க இயலும்.

போற்றத்தக்க இவ் அரிய முயற்சியில், புதுவைக்குயில் பாவேந்தரை அடையாளப்படுத்தியதில் நிறைவின்மையைக் குறிப்பிட விரும்புகிறோம். வரலாற்றுப் பேணலில் பேரார்வமும் பெரும் ஈடுபாடும் கொண்டு உழைப்பெடுத்தோரையும் துணையிருந்தோரையும் நெஞ்சாரப் பாராட்டவேண்டும்; பாராட்டுகிறோம்! வாழ்த்துகிறோம்!
============================================================================