வியாழன், 22 அக்டோபர், 2009

அண்ணா நூற்றாண்டு நினைவேந்தல்


பாவலர் நெஞ்சில் பேரறிஞர்

அருந்தமிழ்ப்  பாவரங்  கணிசெயுந்  தலைவ !
இருந்தமிழ்ப்  பாவலீர் !  பொருந்தவை  யமர்ந்த
அறிஞரீர் !  பெரியீர் ! அன்புறு  தாய்க்குலச்
செந்தமிழ்  உணர்வீர் !  செயல்வல்  இளமையீர் !
தோழமை  சான்ற  தூயநல்  லுளத்தீர் !
ஆழன்  பார்ந்தே  அனைவரை  வணங்கினேன் !
அண்ணா  நூற்றாண்  டணிதிகழ்  நிறைவில்
எண்ணிப்  பாவரங்  கெளிமையில் அமைத்தனர் !
பாவலர்  நெஞ்சில்  பேரறி  ஞர் என
மேவுறு  தலைப்பில்  பாவளி  என்றனர்!                           -10

அண்ணா !  அட,ஓ !  எண்ணம்  இனிக்கும்
வண்ணத்  திருப்பெயர் !  ஈரா  யிரமாண்(டு)
இழிதளைப்  பட்டஎம்  இனத்தினைக்  காக்க
எழுச்சியோ  டிளைஞரை  ஈர்த்தவர்  பெயரிது !
ஆரையும்  விடவும்  ஆரிய  அராவை
நேருறத்  தாக்கி  நிலைகெடக்  கிடத்திய
ஒருதனிப்  பெரும்பணிப்  பெரியார்  தேர்ந்தசெந்
தெருள்தெளி  மாணவர்  தீந்தமிழ்ப்  பெயரிது !
மூடுற்ற  தமிழினப்  பீடு  விளக்கிய
ஈடிலா  அறிஞரின்  சூடெழும்  பெயரிது !                          -20

தாய்நிலந்  தன்னைத்  தமிழ்நா  டென்றே
வாய்மகிழ்ந்  தழைக்க  வைத்தவர்  பெயரிது !
ஆட்சியில்  கல்வியில்  காட்சியில்  இசையில்
நீட்சி  தமிழின  வீழ்ச்சியென்  றுணர்த்தி
நலங்களைச்  சிதைத்தோர்  கலக்குற  துலக்கமாய்ச்
சொலல்வல்  திறத்தரின்  சுருக்கப்  பெயரிது !
செத்ததை  விலக்கிய  செந்தமிழ்த்  திருமணம்
ஒத்தொப்  பிடவோர்  சட்டஞ்  சமைத்தவர் !
பிறப்பிற்  பிரிவினை  இறக்கங்  கூறிய                                 
சிறப்பிலா  ஆரிய  மாயை செகுத்தவர் !                      -30

தமிழர்  உணர்வுத்  தழல்தீப்  பரவவும்
இழிவொழித்  திவ்வினம்  ஏற்றமுற்  றிடவும்
அயரா  துழைத்த  வயவரி  யாரவர் !
பெயராப்  பெரும்புகழ்ப் பேற்றில்  நிலைத்தவர் !
இராசாசி  சூழ்ச்சியில்  நேரு  தட்சிண
இராச்சியம்  கொணர  இங்கதற்  கெதிராய் 
மொழிவழி  அரசுகள்  வழிவழி  அமைய
கழிபெரு  மாற்றலாய்க்  கடுங்குர  லார்த்தவர்! 
இந்திய  தேசிய  மெதிர்த்தா  ராயினும்
நந்தமி  ழினநல  நாட்டமிக்  கிருந்தும்                       -40

தெரிந்தே  திராவிடத் தேசியம்  பேசி
அருந்தமிழ்த்  தேசியம்  பொருந்திடா  தெதிர்த்தமை
ஒப்போலை  அரசியல்  தப்பதே!  சறுக்கலே ! 
இப்பிழை  யிவர்புகழ்  இறக்கிட  வில்லை !
செந்தமிழ்ச் சீருரை  தந்திடும்  வெற்றியால் 
எந்த  நிலையையும்  சந்தித்த  திவர்நா !
அடுக்கு  மொழியுடன்  அண்ணா  தமிழை
ஒடுக்கம்  உடைத்தே  உலாவரச் செய்தார் !
இருமொழி  போதும்  இந்திவேண்  டாவென
மருட்டலாய்த்  திட்டம்  மறுத்துக்  கொணர்ந்தார் !            -50


அறிஞர்  இவரென  பெர்னாட்  சாவென                     
அறிவித்  தேத்தினார்  அண்ணாவைக்  கல்கி
ஆங்கிலந்  தனிலிவர்  பாங்குற  ஆற்றிய
ஓங்குரை  நேருவின்  உளங்கவர்ந்  தீர்த்தது !
ஈழத்  தமிழர்  இன்னலைத்  தீர்க்க
ஆழவு  ணர்ந்தே  அன்றவர்  முயன்றார் !                   
ஓர்வோம்  அண்ணா  உயிர்த்திருந்  தாரேல்
ஓரிலக்  கம்பேர்  சூருற  மடிவரோ ?
இன்றுமூ  விலக்கம்  இழிவினி  லின்னலில்
குன்றி  யங்கவர்  நின்றிட  விடுவரோ ?                          -60
 
தன்னலந்  தன்னுடை இன்குடும் புறுப்பினர்
நன்னலங்  கருதா  செந்நலத்  தொண்டர் !
ஒருமுறை அண்ணா  உரோமிற்குப்  போனார்
திருவுறை  போப்பிடம்  தேர்ந்திவர்  கேட்டதோ
விடுதலை  மறவர்  இரானடே விடுதலை
வடுவறுந்  தொடுப்பில்  எடுப்புற  அடுக்கி
அண்ணா  கேட்டதா  லவர்விடு  பட்டார் !                   
எண்ணிய  வெல்லாம்  நன்மாந்த  நேயம் !
பெரிதுபெரி  தண்ணா  பெரும்புகழ்  விரிக்க!
உரிமைபெற்  றிங்குநாம்  உயர்வுறற்  கெனவே                     -70

ஆர்த்தார்;  உழைத்தார்;  அதன்வழி
சீர்த்திசால்  தமிழினங்  காத்தனர்  அவரே!
----------------------------------------------------------------------------------------------------------

    








.

திங்கள், 19 அக்டோபர், 2009

இன்னும் முடிந்த பாடில்லை!


இன்னும் முடிந்த பாடில்லை!


இன்னும் முடிந்த பாடில்லை
     இவர்கள் நடிப்பும் நாடகமும்!
சொன்னார் ஐயா யிரம்பேர்கள்
     சொந்த இடத்திற் கனுப்பியதாய்!
இன்னோர் அடைப்பிற் கனுப்பியதை
     இப்படிப் பொய்யாய்ச் சொல்கின்றார்!
முன்னும் பின்னும் முரணாக
     முழுப்பொய் சொல்லிக் குழப்புகிறார்!

ஐந்து நூறு கோடிதொகை
     அள்ளித் தரவே போகின்றார்!
மெய்யாய் முன்னர் கொடுத்ததொகை
     மீளாத் துனபத் தமிழர்தம்
பைதற் குறைக்க உதவியதா?
     படித்தோம் செய்தி யத்தொகையைக்
கையர் சிங்க ளப்படையர்
     களிக்க அவர்க்கே கொடுத்தாராம்!

எதுவும் இவர்க்குப் பொருட்டில்லை!
     யாரைக் குறித்தும் கவலையிலை!
பதுங்கிப் பலவும் செய்கின்றார்
     பச்சை யாய்ப்பொய் சொல்கின்றார்!
எதுசெய் துந்தன் குடும்பநலம்
     என்றும் ஓங்கி நிலைத்தலெனும்
அதுவே அவரின் குறிக்கோளாய்
     ஆன தறிவோம் தமிழவரே!

------------------------------------------

திங்கள், 5 அக்டோபர், 2009

புதுவையில் மீண்டும் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கு


            
     புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கு நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் 4-10-2009 முற்பகலில் புதுவையில் நடைபெற்றது.
            தோழர்கள் இரா.சுகுமாரன் அவர்களும் கோ.சுகுமாரன் அவர்களும் கலந்துரையாடல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இக் கலந்துரையாடலில் 17 பேர் கலந்து கொண்டனர்.
            2010 சனவரியில் பொங்கல் விழாவிற்கு முன்னர் 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிலரங்கைப் புதுவையில் நடத்துவது என்றும், பயிலரங்கைத் தொடக்கி வைக்கப் புதுவைத் துணைநிலை ஆளுநர் அவர்களை அழைப்பது என்றும் கலந்துரையாடல் கூட்டம் முடிவு செய்தது.

கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள்: : 1. இரா.சுகுமாரன்
2. கோ.சுகுமாரன்
3. தமிழநம்பி
4. இரா.முருகப்பன்
5. வீரமோகன்
6. கு.இராமமூர்த்தி
7. எ.சீனுவாசன்
8. வெங்கடேசு
9. க.அருணபாரதி
10. இரா.இராசராசன்
11. சீ. பிரபாகரன்
12. ஆனந்தகுமார்
13. நா.இளங்கோ
14. மகரந்தன்
15. இரா.செயப்பிரகாசு
16. சி.முருகதாசு
17. ந.இரவி

     கலந்துரையாடல் கூட்டச் செய்திகளைப் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் வலையிலும் ( http://puduvaibloggers.blogspot.com/ ) காணலாம். மேலும் செய்திகளுக்குக் கைப்பேசி எண் : 94431 05825 ஐத் தொடர்பு
கொள்ளலாம். 

செய்தி : தமிழநம்பி

--------------------------------------------------------------------------

வியாழன், 17 செப்டம்பர், 2009

மூன்று வெண்பாக்கள்!

            'அமுதசுரபி' மாத இதழில் வெண்பாப் போட்டிப் பகுதியில் ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதச் சொல்கின்றனர்.
கடந்த மூன்று இதழ்களில் வந்த என்னுடைய வெண்பாக்கள் :

  1. கொடுக்கப்பட்ட ஈற்றடி : நன்றாகச் செய்க நயந்து 
என் பாடல் : 
நாடு நனிநல்ல! நாடா தொதுக்கிடுக 
கேடு விளைக்கின்ற கீழ்மைகளை! - தேடுபணி 
பொன்றாப் புகழும் பொதுநலனும் நாடிமிக 
நன்றாகச் செய்க நயந்து! 


  1. கொடுக்கப்பட்ட ஈற்றடி : நெஞ்சில் எரியும் நெருப்பு 
என் பாடல் : 
தன்னல வாழ்வே தமதாக்கித் தம்குடும்ப 
இன்னலம் தன்னையே எண்ணிடுவார்! - என்றென்றும் 
வஞ்சஞ் செயவஞ்சார் வாழ்வை நினைக்கையில் 
நெஞ்சில் எரியும் நெருப்பு. 


  1. கொடுக்கப்பட்ட ஈற்றடி : என்றும் திருநாள் எனக்கு 
என் பாடல் : 
வீதிதொறும் மாழ்கமது! வேகவுணா! ஊதுபுகை! 
ஊதியமும் கிம்பளமும் உண்டய்யா! ஏதிங்கே
ஒன்றிவரா மேலாள்! ஒருக்காலும் சிக்கலிலை! 
என்றும் திருநாள் எனக்கு!

--------------------------------------------------------------------------------------------------

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

மேலாண்மையில் தமிழ்!


(விழுப்புரம் ‘மருதம்விழாப் பாட்டரங்கில் கலந்துகொண்டு பாடிய அறுசீர்மண்டிலப் பதிகம்)

பெருமதிப்புக் குரியோரே! பேரன்பீர்! தலைமையமர்
பெரும்பா வாண!
அருந்தமிழ்ப்பா யாத்தளிக்கும் ஆற்றல்சால் பாவலரே!
அன்பு நண்பீர்!
இருளகற்றும் அறிஞர்களே! இன்னன்புத் தாய்மாரே!
இளமை யோரே!
தெருளார்ந்த தமிழ்வணக்கம் தெரிவித்தேன் எல்லோர்க்கும்
தெளிந்த அன்பால்!

விழுப்புரத்தில் மருதவிழா! விருப்பூட்டும் இனியவிழா!
விளக்க மாக
செழுமரபுக் கலைகளெலாம் சீருறவே தொகுத்தளிக்கும்
சிறப்பு மிக்க
எழுச்சிமிகு சுறவவிழா! எல்லாரும் மகிழ்கின்ற
இவ்வி ழாவின்
கெழுவலுறு பாட்டரங்கில் கிழமையிழந் தேங்குதமிழ்
கிளத்த வந்தேன்!

மேலாண்மை செய்மொழியாய் மேற்குலக மொழியின்னும்
மேலி ருக்க
ஏலாத மொழியிங்கு எமையாள ஏற்றமிகு
எம்த மிழ்த்தாய்க்(கு)
ஆலாத்தி எடுத்ததன்பின் அங்கோர்மூ லைதொலைப்பார்
அதையு ணர்ந்தால்
மேலான இந்தஇனம் மீத்தாழ்ச்சி உற்றகதை
மிகவி ளங்கும்!

வரப்பகலந் தொடர்பாக வழக்கொன்று நம்சிற்றூர்
வடிவே லுக்கும்
பரப்புகுறை நிலமுடைய பச்சையப்பன் இருவருக்கும்
      பட்ட ணத்தில்
உரத்தகுரல் வழக்கறிஞர் உகைத்தெழுந்தே ஆங்கிலத்தில்
      உரைசெய் கின்றார்!
கரப்பின்றிக் கூறின்இவர் கவலைமிகப் புரியாமல்
      கலங்கி நிற்பார்!

சிற்றூரில் வாழ்கின்ற சின்னத்தாய் மனைஉரிமை
      சிறுகு டிற்கு
கொற்றத்தார் அலுவலகம் கொடுத்தவிடை ஆங்கிலத்தில்!
      கூறும் செய்தி
கற்றறியாச் சின்னத்தாய் கலங்கிடுவாள் புரியாமல்!
      காணீர் ஈதே
உற்றநிலை! தமிழிலதை உரைத்திருந்தால் சின்னத்தாய்
      உணர்வாள் அன்றோ?

ஆண்டைம்பைத் தொன்றாயிற்(று) ஆட்சிமொழி சட்டமினும்
      ஆழத் தூங்கும்!
மாண்தமிழில் எழுதாது மக்களுக்குப் புரியாத
      மயக்க மூட்டும்
வேண்டாத மொழியினிலே விடைதருவார்! அரசாணை
      விடுப்ப தெல்லாம்
ஈண்டெமக்கு விளங்காத இன்னொருவர் மொழியிலெனில்
      இதுவா ஞாயம்?

அரசாணை நூற்றுக்கும் அதிகமுண்டு! தேவையெலாம்
      அவற்றை மெய்யாய்
அரசுநடை முறைப்படுத்தல்! ஆட்சிதமிழ் வழிநடந்தால்
      அதனால் மக்கள்
அரசாளும் முறைபுரிந்து அதன்நிறைகள் குறைகளையும்
      அறியக் கூடும்!
அரசினிலும் பங்கேற்க அதன்வழியாய்த் தொண்டாற்ற
      ஆகும் ர்க்கும்!

அதிகாரம் மக்களளித்(து) அரியணையில் அமர்ந்திடுவோர்
      அச்சம் இன்றி
அதிர்தலுற செயற்படுவீர்! ஆட்சிமொழி தமிழென்றே
      அறுத்துச் சொல்வீர்!
மதியாதார் ஒதுக்கிதமிழ் மக்களுக்கு விளங்குவகை
      மாண்பில் ஆள்வீர்!
புதியமொழி குழப்பமற பொருத்தமுற மக்களுக்குப்
      புரியும் அன்றோ?

அலுவலகப் பணியாளர் ஆசிரியர் மற்றவரும்
      அவர்கை யொப்பம்
பொலிதலுறத் தாய்மொழியில் பொறித்திடுவீர்! மக்களுக்குப்
      புரியும் வண்ணம்
சலியாதே தந்திடுவீர் தமிழினிலே உம்விடையைச்
      சட்ட திட்டம்
புலனாகும்! அவருணர்ந்தே போயடுத்த பணிபார்ப்பார்
      பொல்லாப் பில்லை!  

அலுவலக நடைமுறைகள் அரசாணை தமிழினிலே
      அளிக்க வேண்டும்!
மலியமிகக் கணிப்பொறிகள் மாத்தமிழில் மென்பொருள்கள்
      மன்ற வேண்டும்!
நலிவில்லாத் தொடர்புமொழி நற்றமிழே எனுமுறுதி
      நாளும் வேண்டும்!
வலிவோடு இவைசெய்தால் வண்டமிழிங் காட்சிசெயும்
      வாழ்வும் ஓங்கும்!          

--------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இன்முகத்தோடு உள்ளனராம்!

   இன்முகத்தோடு உள்ளனராம்!

இனக்கொலையர் வெங்கொடுமை எல்லை மீற
      இனியுமிதைப் பொறுப்பதுவோ என்றெ ழுந்த
மனக்கனலர் திரண்டறிவு ஆற்றல் வீரம்
      மாசற்ற ஈகத்தால் மண்ணை மீட்டே 
இனக்கொடியை ஈழத்தில் ஏற்றி ஆண்டார்!
      எல்லாரும் நல்லாட்சி இதுவென் றாரே!
தனக்கெனவே வாழ்ந்திடுவார் தில்லி யோடு
      தன்மானம் கெட்டுஓர்ஒப் பந்தம் போட்டார்!


சிங்களனை ஆளாக்கித் தில்லி யங்கே
      செந்தமிழ இனந்தன்னைச் சிதைத்த ழிக்க
இங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை மாற்ற
      ஏய்த்துநடித்(து) ஏமாற்றி எல்லாம் செய்தார்!
எங்குமிலாக் கொடுங்குண்டு வீசி அங்கே
      எண்ணற்ற தமிழர்களைக் கொன்றார் இங்குப்
பொங்குணர்வில் பதின்மூவர் பொசுங்கிச் செத்த
      போதுமதைப் பொருட்படுத்தாக் கொடுமை என்னே!


உயிரிருந்த மூன்றிலக்கம் பேரை அங்கே
      ஒருசேர முள்வேலி அடைப்புக் குள்ளே
செயிர்உருவர் சிறைவைத்துச் சிதைக்கின் றாரே
      சிந்தைமிக நொந்தவரும் சிறுகச் சாக!
அயிறற்கு உணவில்லை அருந்த நீரும்
      அழற்காயம் நோய்கட்கு` மருந்து மில்லை!
எயிலிருக்கும் கோட்டையிருந்(து) இரண்ட கத்தில்
      இவருரைத்தார் இன்முகத்தோ(டு) இருப்ப தாக!


அடைத்துவைத்த கூடாரம் மிதந்த தங்கே
      அடைமழையின் வெள்ளத்தில் அவர்ந னைந்தே
முடைநாற்ற நீரினிலே நின்ற வாறே
      முன்னறியாத் துனபத்தில் மூழ்கிப் போனார்!
கடைகெட்ட தொலைக்காட்சி காட்டு மிங்கே
      களிப்போடு பேசியமர்ந் திருப்ப தாக!
விடைசொல்லும் நாளொன்று வந்தே தீரும்!
      விழிப்புவரும்! விடிவுவரும்! வீழ்வார் வஞ்சர்! 
 ----------------------------------------------------------------------------------------------------------
     
  

பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர்!


    பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான
                 ஈழத்தமிழறிஞர்!


தமிழ்ஈழம் என்று இக்காலத்தில் நாம் அழைக்கும் பகுதி, சிரீலங்கா என்று பெயர் மாற்றப்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளாகக் குறிக்கப் படுகின்றது. இலங்கையின் மேற்குக் கரையிலும் மிக நெடுங்காலமாகவே தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர்.  அங்குப் பிறந்த அரிய ஆற்றல் மிக்க அறிஞர் பன்மொழிப் புலவர் சய்மன் காசிச் செட்டி ஆவார்.

தமிழர் வாழ்ந்த மேற்குக்கரை :

மேற்குக்கரையில் அமைந்துள்ள முனீசுவரர் கோயிலும், அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளும், அங்கு வாழ்ந்த மூதாதையர் பயன்படுத்திய தமிழில் எழுதப்பட்ட காணி நிலங்களுக்கான உறுதிகளும் சான்றுகளாக உள்ளன.

மேலும் இலங்கையின் மேற்குக் கரையோரமாக உள்ள பெருநிலப்பரப்பில், சிலாபம், உடப்பு, கருக்குப்பனை, மங்கலவெளி, கட்டைக்காடு, நாவற்காடு, நுரைச்சோலை, புளிச்சாங்குளம், நரைக்களி, மாம்புரி, பாலாவி, முந்தல், பாலைக்குடா, குறிஞ்சிப்பிட்டி, கற்பிட்டி, புத்தளம், மருதங்குளம், பலகைத்துறை, முன்னைக்கரை, நஞ்சுண்டான் கரை, கண்டல் குடா, முதலிய பல இடங்கள் தூயதமிழ் மணக்கும் ஊர்களாக நிலவி வந்துள்ளன என்பதற்குப போதிய சான்றுகள் உள்ளன என்று திரு.க.சி.குலரத்தினமும், தமிழ்ஒளி க.செபரத்தினமும் குறிப்பிடுகிறார்கள்.

உலகச் செலவரான (world traveller) இபன்பற்றுற்றா என்பவர், 1344இல் இலங்கைக்கு வந்திருந்த போது, யாழ்ப்பாண அரசரான செகராச சேகரனை, புத்தளத்திலிருந்த அரண்மனை ஒன்றில் சந்தித்ததாக தம் நூலான சாவர்நாமா வில் குறிப்பிட்டுள்ளதால், புத்தளம் பகுதி யாழ்ப்பாண அரசனின் ஆட்சியிலிருந்த தமிழ்ப்பகுதி என்பதை அறியலாம்.

பிறப்பும் கல்வியும்  :

மேற்குக் கரையோரத்தில் பெரிய ஊராகவும் துறைமுகமாகவும் விளங்கியது கற்பிட்டி ஆகும். இவ்வூரில் 21-3-1807ஆம் ஆண்டில் காபிரியேல் என்பார்க்கும் மேரி என்பார்க்கும் பிறந்தவர் சய்மன் காசிச் செட்டி என்பவராவார். செட்டி என்பது செட்டிமார் என்று அழைக்கப்பட்ட வணிகர் குலத்தைக் குறிக்கிறது.

சய்மன் காசி, கற்பிட்டியிலும், புத்தளம் கொழும்பு ஆகிய இடங்களிலும் கல்வி பயின்றார். தம் பதினேழாம் அகவைக்குள் தாய்மொழியாகிய தமிழுடன் சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றுப் புலமை பெற்றார். மேலும், சமற்கிருதம், ஒல்லாந்தம், போர்த்துக்கீசியம், இலத்தீனம், கிரேக்கம், எபிரேயம், அரபி, பாளி ஆகிய மொழிகளையும் தாமே கற்றுத் தேர்ந்து பன்மொழிப் புலவரானார்.

பணியாற்றிய பதவிகள் :

     1824இல் கற்பிட்டி நயன்மன்ற மொழிபெயர்ப்பாளராக அமர்த்தப்பட்டார்.
1828இல் புத்தளம் சிலாபம் பகுதிகளுக்கான மணியக்காரர் என்றழைக்கப்படும் ஊர்த் தலைமகனாகவும், 1833இல் அவர்தம் 27ஆம் அகவையில் மாவட்ட முதலியராகவும் அமர்த்தப்பட்டார். 1838இல் சய்மன் காசி, சட்டமன்ற உறுப்பினராக அமர்த்தம் பெற்றார். 1845இல் இலங்கை ஆட்சிப் பணியில் (Ceylon civil service) சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதனைத் தொடர்ந்து 1848இல் மாவட்ட நயனகராக அமர்த்தப்பட்டார். மாவட்ட நயன்மன்ற நடுவராக இருந்த போதே 1860ஆம் ஆண்டில், தமது 53ஆம் அகவையில் காலமானார். மாவட்ட நயனகராக பதவியமர்த்தப் பட்ட முதல் இலங்கையர் இவரே ஆவார்.

ஆற்றிய அரிய பணிகள் :
    
காசியின் பணிகள், அவருடைய புதுமையான ஆற்றல்களைக் காட்டுவனவாக விளங்கின. அவர் வரலாற்றறிவைப் புலப்படுத்துவன வாகவும், தமிழ் இனம் குமுக உயர்வு பற்றியனவாகவும், தமிழ் இலக்கியம் தமிழ்ப்புலவர்கள் பற்றினவாகவும் சமய அடிப்படை கொண்டனவாகவும் இருந்தன.
    
உலக உருண்டையில் இலங்கைத் தீவு அமைந்துள்ள அகலாங்கு நெட்டாங்கு அளவுகள் பற்றி, அக்கால நிலவரைவியலர் வியக்கும் வகையில் எடுத்துக் கூறியவர் காசி. புதும அளவைக் கருவிகள் எவையுமின்றி, மேலைநாட்டு அறிஞர் வியக்கும் வகையில், இலங்கையின் நீளம், அகலம்,  சுற்றளவு, பரப்பு முதலியவற்றை முதலில் கூறியவரும் அவரே.

இலங்கையின் அனைத்து இன மக்களின் வரலாறு பற்றியும், ஊர்ப் பெயர்களின் வரலாறு பற்றியும் ஆய்ந்தெழுதினார். சிலோன் கருப்பொருட் களஞ்சியம் (Ceylon  gazetteer) என்னும் பெயரோடு 1834 இல் இச்செய்திகள் வெளிவந்தன. இந்நூல், காசிக்குப் பெயரும் புகழும் பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் அரசு வெளியிட்ட அரசிதழுக்கும் பிற இதழ்களுக்கும் முன்னோடியாக இருந்தது.

வரலாற்று நூல்கள் :
    
     கற்பிட்டிப் பகுதியில் கரையோரத்திலுள்ள குதிரைமலை என்னும் இடத்தின் தொன்மைச் சிறப்புகளை ஆய்ந்து எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொல் பழங்காலத்தில் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றிய 1658ஆம் ஆண்டு வரையில் எழுதிய காசியின் நூல், பிற்கால வரலாற்று ஆசிரியர்களுக்குக் கைவிளக்காக உதவியது.

பரதவர் குல வரலாற்று நூலையும் காசி எழுதியுள்ளார். பல்வேறு நூல்களை ஆராய்ந்து இவர் எழுதிய இலங்கை வரலாற்றுக் குறிப்பு என்னும் நூலின் மூலம் சிறந்த வரலாற்று ஆசிரியராகக் காசி மதிக்கப்பட்டார்.

ஆக்கிய அகராதிகள் :

     தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக்கண்டறிந்து, அவற்றை நிரல்படுத்தி எழுதியிருக்கிறார். தமிழ் வடமொழி அகராதி, ஆங்கில -  தமிழ் அகராதி, தமிழ்ப் புதலியல்(botany) அகராதி ஆகிய நூல்களை எழுதினார்.  தமிழ் நூல்களின் பட்டியல் ஒன்றை அகராதி அமைப்பில் உருவாக்கினார். தமிழ்ப் புலவர்கள் 202 பேரின் வரலாறு கூறும்  நூலை, தமிழ் புளூடாக் (Tamil Plutarch) என்ற பெயரில் எழுதினார்.

     (பண்டை கிரேக்கத்தில் வாழ்ந்த 46 புலவர்களின் வரலாற்றை எழுதிய அறிஞர் புளூடாக்(Plutarch)கின் நூல், அவர் பெயரிலேயே புளூடாக் என்று வழங்கப்பட்டது.)
    
     மாலத்தீவு மொழியில் சிங்களமொழி கலந்துள்ளது பற்றி ஆராய்ந்தும், யாவாத்தீவின் மொழிக்கும் சமற்கிருத மொழிக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்தும் சய்மன் காசி எழுதியிருக்கிறார்.

தமிழர் தொடர்பான நூல்கள் :

     காசி எழுதிய தமிழ்ப்புலவர் வரலாறு கூறும் நூல், தெ.பொ.மீ., விபுலானந்த அடிகளார் ஆகியோரின் அணிந்துரையை ஏற்று 1946இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது.

     தமிழ்மொழியில் ஆக்கப்பட்டிருந்த நூல்களின் பட்டியலை அந்நூல்களின் பெயர், நூலாசிரியர் பெயர், நூல்கள் கூறும் பொருள், ஆக்கிய ஆண்டு முதலிய விளக்கங்களுடன் தொகுத்து 1848இல் வெளியிட்டார். இவ்வகையில் வெளிவந்த நூல்களில் இதுவே முதல் நூலாகும்.

     சய்மன் காசி அவர்களுக்குப் புகழ் தந்த நூல் தமிழரின் சாதிப்பாகுபாடு, பழக்க வழக்கங்கள், குணவியல்புகள், இலக்கிய இலக்கண நூல்கள் தொடர்பானதாகும். மருத்துவக் கலாநிதி எசு.சிபோல் அவர்களின் பாராட்டு அணிந்துரையுடன் 1934இல் இந்நூல் வெளிவந்தது. இவரின் மற்றைய நூல்களைப் போலவே இந்நூலையும் காசி ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்.
    
     இந்நூல், தமிழ்நாட்டின் தொன்மை, தமிழ்மொழியின் பழமை, தமிழரின் உடைகள் அணிகலன்கள், நாகரிகச் சிறப்பு, உணவு வகைகள், மூத்தோரை மதிக்கும் பண்பு, பெண்கள் உயர்வாகப் போற்றப்படுதல், தமிழரின் திருமணச்சடங்கு முறைகள் மலையாள மொழி பற்றிய விளக்கம் முதலியவற்றைக் கூறுகிறது.

     தமிழர்கள் 3300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் வாழந்து வருகின்றனர் என்றும் இந்நூல் விளக்குகிறது. 1833ஆம் ஆண்டுக்கு முற்பட்ட இலங்கை, மாநில மாவட்டப் பிரிவுச் சிக்கல்கள் இன்றி இருந்ததாகவும் அறிவிக்கிறது.
    
     அறிஞர் சய்மன் காசி அவர்களுடைய நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும் அந்தக் காலத்தின் தேவைக்கேற்ப ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த போதிலும்,
அவையனைத்திலும் தமிழ் உணர்வு இழையோடி இருப்பதனால், அவருடைய பணிகள் யாவும் தமிழ்த் தொண்டுகளாகவே கொள்ளப்படும் என்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.

     காசி, தமிழில் உதயாதித்தன் என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை 1841இல் தொடங்கிச் சிறிது காலம் நடத்தியதும் அவரின் தமிழ்ப்பற்றைக் காட்டுவதாகும் எனபதும் அறிஞர்களின் மதிப்பீடாகும்.

பிற நூல்கள் :

     காசி சமயஞ் சார்ந்த நூல்களையும் எழுதி இருக்கின்றார். திருக்கேணேசு வரத் திருக்கோயில் பற்றிய கவிராச வரோதயரின் பழைய தொன்மப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, 1831இல் வெளியிட்டார். கடவுள்மா முனிவரின் திருவாதவூரர் தொன்மத்தின் பகுதிகளையும் அல்லியரசாணி வரலாற்றையும் அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

     முசுலிம்களின் சீறாப் புராணத்தை ஆய்வுசெய்து, சீறாப் புராணத்தின் சிறப்பு என்னும் நூலை எழுதினார். கத்தோலிக்கத் திருச்சவைகளின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பற்றி எழுதியிருக்கின்றார். பிலிப்-டி-மெல்லோ, ஓசப் வாசு ஆகியோரின் வரலாறுகளையும் எழுதியிருக்கின்றார். மேலும், கிறித்தவ மறைதோன்றியத்தின் (வேதாகமம்) பழைய ஏற்பாட்டிலுள்ள ஆதித் தோன்றியம் பற்றிய ஒரு நூலையும் அவர் எழுதியுள்ளார்.

குமுகப் பணி :

     சய்மன் காசி, தம் சொந்த ஊராகிய கற்பிட்டியில் ஐம்பது பிள்ளைகள் படிக்கக்கூடிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அப்பள்ளியில் இலவயமாகக் கற்பிக்க ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

     கற்பிட்டியில் அவரது சொந்தச் செலவில், திருச்சவை ஒன்றையும் கட்டிக் கொடுத்தார்.

பாராட்டுகள் :

     மக்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி நூலாக்கி வெளியிடும் காசியின் முயற்சியைப் பாராட்டி, சர் இராபர்ட்டு ஆட்டன், அவர் எழுதிய நூலின் பதிப்புச் செலவிற்கு 100கினி பணமும் அன்பளிப்பாகத் தந்தார். சர் சார்லசு மார்சல், சர் சான் வில்சன்,  எசு.சிபோல், சிலோன் அப்சர்வர் என்ற ஆங்கில ஏடு, ஆளுநர் மக்கன்சி ஆகியோரும் இவரைப் பாராட்டியுள்ளனர்.

     விபுலானந்த அடிகளார், தெ.பொ.மீ., களத்தூர் வேதகிரியார், முனைவர் கால்டுவெல், தி.பி.எ.என்றி ஆராய்ச்சி, எப்.எக்சு.சி.நடராசா ஆகியோரும் சய்மன் காசியைப் பாராட்டியுள்ளனர்.

     கற்பிட்டியில், காசியின் வீடு இருந்த தெரு, அவரைப் பெருமைப் படுத்தும் வகையில் செட்டித்தெரு என்று அழைக்கப் படுவதாயிற்று. காசியின் புகழுரைக்கும் பாராட்டு வாசகமொன்று, புத்தளம் நயன்மன்றத்தில் 1983இல் பொறிக்கப்பட்டது. 1987இல் அவர் உருவப்படந் தாங்கிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

முடிவாக...

     பதினேழே அகவையில் பதினொரு மொழிகளுக்கும் மேல் கற்றுப் பன்மொழிப் புலமை பெற்ற அறிவாற்றலராகத் திகழ்ந்தவர் சய்மன் காசி அவர்கள். அரசுப்பணிகளில் இருந்து கொண்டே, ஐம்பத்து மூன்று அகவைக்குள், பல்வேறு களப்பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்; ஏறத்தாழ ஐம்பதிற்கும் குறையாத நூல்களையும் நிறைய கட்டுரைகளையும் எழுதித் தந்துள்ளார்.

     மாந்தநேயப் பற்றாளராகவும், குமுகப்பணியில் வல்லவராகவும் காசி திகழ்ந்திருக்கிறார். பல்துறை அறிஞராகவும் வினையாண்மை மிக்கவராகவும் விளங்கிய சய்மன் காசியின் வாழ்க்கை, இளையோர்க்கு அரிய செயல்களை ஆற்ற வழிகாட்டி ஊக்கும் என்பதில் ஐயமில்லை.

     செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
     செயற்கரிய செய்கலா தார்.                                                                                               

----------------------------------------------------------------------------------------------------------------------------------
உசாத் துணை நன்றியுரைப்பு:

  1. தமிழ் வலைக் கலைக் களஞ்சியம் (விக்கிபீடியா)
  2. தமிழ்ப் பேரறிஞர் சைமன் காசிச் செட்டி வரலாறும் பணிகளும் தமிழவேள் க.இ.க. கந்தசுவாமி.
  3. ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் தமிழ்ஒளி க.செபரத்தினம்.
  4. kalaikesari.com.
 துணை செய்தார்க்கு நெஞ்சார்ந்த நன்றி.

------------------------------------------------------------------------